பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


இந்த முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்த வருடம் குறித்த எண்ணிக்கை 64.73% ஆக பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த பரீட்சையில் மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 222,774 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாவர். அதன்படி, 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக 2021ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றியவர்களில் 62.89% வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கையானது 2022ஆம் ஆண்டில் 63.25%ஆகவும், 2023இல் 64.33%ஆக அதிகரித்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 64.73%ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கே அவதானிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவெனில், 3 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரே அளவில் இருப்பது அவதானிக்கப்படுகிறது, 3.45% சதவீதத்தைக் காட்டும் இதன் எண்ணிக்கையானது 9,457ஆக காணப்படுகிறது.

மேலும், 3 பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 29,244 ஆகும், இது கடந்த வருடத்தைப் போலவே 10.66% ஆகும். கடந்த காலங்களிலும் இதேபோன்ற நிலைமை பதிவாகியுள்ளது. இது விசேட கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாகும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற பாடசாலை பரீட்சார்த்திகளைப் பொறுத்தவரையில் பெண்கள் 67.32 சதவீதத்தினர் தகுதி பெற்றுள்ளனர். மேலும் ஆண்கள் 67.33 சதவீதத்தினர் தகுதி பெற்றுள்ளனர்.

மொத்தமாக பார்க்கும் போது இம்முறை ஆண்கள் 57.91 சதவீதமானோரும், பெண்கள் 69.10 சதவீதமானோரும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.