பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை!
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகமாக தேவையாயிருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை முன்கூட்டியே உயர்த்தும் வியாபாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பண்டிகைக் காலத்திற்காக சிறப்பு சோதனைத் திட்டம் உருவாக்கப்பட்டு, கடந்த சில நாட்களில் மட்டும் 1200க்கு மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளன.
இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதில், குறிப்பாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை வெளிப்படையாகக் காட்டாமல் விற்கும் வியாபாரிகள், நியமிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்கும் செயற்பாடுகள், காலாவதியான பொருட்களின் விற்பனை, வாடிக்கையாளர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்காமை, பொருட்களை பதுக்கி வைக்கின்றது, விற்பனைக்கு மறுப்பது மற்றும் விலைக் குறைப்பு அல்லது விற்பனை எனும் பெயரில் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகள் ஆகியவை மிகுந்த கவனத்துடன் பரிசோதிக்கப்படுகின்றன.
விடுமுறை நாட்களிலும் இரவிலும் இந்த சோதனைகள் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பாக, சம்பா மற்றும் கீரி சம்பா வகை அரிசி, முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்ற பொருட்களின் விலை நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்குடன், அவற்றை உயர்த்த முயற்சிக்கும் வியாபாரிகள் மீது புலனாய்வு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வகைச் செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.