50 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள நபர்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை!


சீனாவின் தலைநகர் பீஜிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறைக்காற்றால் நகரமெங்கும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பீஜிங்கில் இருந்து புறப்படவிருந்த மற்றும் பீஜிங்கை நோக்கி வரும் பல விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. அதேபோல் ரயில் மற்றும் பஸ்சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சூறைக்காற்றின் தாக்கத்தில் பீஜிங் நகரத்தில் மட்டும் 300-க்கும் அதிகமான மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. சில பகுதிகளில் வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதுவரை உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சூறைக்காற்றுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் அதிக வேகத்தில் வீசும் காற்றால், உடல் எடை 50 கிலோவுக்கும் குறைவாக உள்ள நபர்கள் தூக்கி வீசப்பட வாய்ப்பு உள்ளதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.