அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ள அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

 

வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வழக்கமான மாத சம்பளத்தை வழங்குவதற்கான திகதிக்கு முன்னதாக, ஏப்ரல் 10 ஆம் திகதி சம்பளம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.


இதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலத்தில் சம்பள உயர்வு மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான நடவடிக்கை அரசாங்கம் எடுத்துள்ளது.


பெப்ரவரி 17 ஆம் திகதி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முன்வைத்த யோசனைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு, 21 ஆம் திகதிக்கு முன்பே திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.


சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


அதிகரிக்கப்பட்ட சம்பளத்தில், குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளம் 24,250 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக 15,750 ரூபாயால் அதிகரிக்கவும், தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும், வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.