உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு ; ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியை நாடு எதிர்கொள்ளும் அபாயம்!
உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியை நாடு எதிர்கொள்ளும் அபாயம் ஏற்படும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நல்ல பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதையடுத்து, எதிர்காலத்தில் சமூகத்தில் பொருளாதார பணவீக்கம் அதிகரித்து, உணவுப் பாதுகாப்பின்மை பரவினால், கிராமப்புறம், அரை நகர்ப்புறம் மற்றும் பெருந்தோட்டக் குடியேற்றங்களில் ஊட்டச்சத்து நெருக்கடி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என அவர் கூறினார்.
மக்களின் வாழ்க்கை இன்னும் ஸ்திரமான நிலைக்கு வராதுள்ளதால், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அனுராதபுரம், மொனராகலை, பொலன்னறுவை மற்றும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள தோட்டங்களைச் சூழவுள்ள விவசாயிகள், மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் மக்கள் உணவின் விலை உயர்வினால் பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.
இப்பிரதேசங்களில் வறண்ட காலநிலை நிலவுவதால், உணவுக்காக செலவழிக்கப்படும் தொகை அதிகரித்து, வருமான ஆதாரங்கள் குறையும், பெறக்கூடிய மகசூல் குறைவடையும். இதனால், சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் போஷாக்கு நெருக்கடி ஏற்படலாம் என அவர் எச்சரித்தார்.
சமல் சஞ்சீவ மேலும் கூறியதாவது, வெற்றிகரமான போசாக்கு திட்டங்கள் இளம் பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை இலக்காகக் கொண்டு அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்காக அரசாங்கம் முன்னதாக கணிசமான தொகையை ஒதுக்கிய போதிலும், நடைமுறையில் அவை மக்களை சென்றடையவில்லை என்று அவர் தெரிவித்தார்.