செஞ்சி சிறுமி வழக்கில் திருப்பம்! குற்றவாளி ராஜதுரை பகீர் வாக்குமூலம் - கூட்டாளி அரவிந்தை காட்டுக்குள் வைத்து விசாரிக்கும் CBCID

 


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா மாயமாகி 23 நாட்கள் ஆகிறது. அக்டோபர் 11-ம் தேதி பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு தூங்கிய குழந்தை நள்ளிரவில் காணாமல் போனார்.

10 நாட்கள் உள்ளூர் போலீசார் தேடியும் துப்பு கிடைக்காததால் வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டது.

ஆலம்பூண்டி அருகே பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் மீது திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் வேறு வழக்கில் சிறையில் இருந்தார்.

சிறுமி மாயமான அன்று நள்ளிரவில் ஆலம்பூண்டி பகுதி செல்போன் டவர் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, ராஜதுரை பயன்படுத்திய 4 போலி சிம் கார்டுகளின் நடமாட்டம் சிக்கியது. அன்று இரவு சிறுமி வீட்டின் அருகே மது அருந்திவிட்டு, நகை - பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் ராஜதுரையை வெளியே எடுத்து CBCID விசாரித்தது.

விசாரணையில் தனது நண்பர் அரவிந்த் பெயரை ராஜதுரை உளறியுள்ளார். அரவிந்த் ஆடு மேய்க்கும் தொழிலாளி, காட்டுப் பாதைகளை நன்கு அறிந்தவர். அக்.11 நள்ளிரவு அவர் எங்கிருந்தார்? மது விருந்தில் பங்கேற்றாரா? கடத்தலுக்கு உதவினாரா? என்ற கோணத்தில் CBCID அவரை பிடித்து விசாரித்து வருகிறது.

நேற்று அரவிந்தை ஆலம்பூண்டி சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதி மற்றும் பாறை இடுக்குகளுக்கு அழைத்துச் சென்று வனத்துறையுடன் இணைந்து தேடுதல் நடத்தினர். காட்டு வழிகளை குற்றவாளிகள் பயன்படுத்தினார்களா, ஏதேனும் தடயம் உள்ளதா என பல மணி நேரம் விசாரணை நடந்தது.

மேலும், நடுப்பட்டு, ரெட்டிபாளையம், சிக்காமேடு பகுதிகளைச் சேர்ந்த 13 நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியை லாரியில் வெளிமாநிலத்துக்கு கடத்தியிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். செஞ்சி பகுதி டீக்கடைகளில் குற்றவாளிகள் படத்தை காட்டி தகவல் சேகரித்து வருகின்றனர்.