இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு - மக்கள் கடும் அவதி
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறுகையில், பாண் மட்டுமின்றி ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் 5 ரூபாவால் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் கோதுமை மா விநியோக நிறுவனங்கள் 1 கிலோ மாவின் விலையை 13 ரூபாவால் உயர்த்தியதே இதற்கு காரணம் என சங்கம் கூறியுள்ளது.
இந்த மா விலை உயர்வு சட்டவிரோதமானது என்றும், அமைச்சர் வசந்த சமரசிங்க நாடு திரும்பும் வரை பாண் விலையை உயர்த்த வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வேண்டுகோள் விடுத்திருந்தது.
அரசின் கோரிக்கைக்கு மதிப்பளித்து கடந்த 10 நாட்களாக பொறுமை காத்ததாகவும், ஆனால் எந்த தீர்வும் கிடைக்காததால் நிறைவேற்றுக்குழு அவசரமாக கூடி இந்த முடிவை எடுத்ததாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாமதம் பேக்கரி உரிமையாளர்களின் தவறு அல்ல என்றும், பொறுப்புள்ள சங்கமாக அரசுக்கு செவிசாய்த்ததால் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.png)