நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு - வெளியான காரணம்

கடந்த 17ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அறிக்கையின்படி, அன்று காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் முதலாவது அலகில் இருந்து வந்த 187 மெகாவாட் மின்சாரம், 450 மில்லி விநாடிகளுக்குள் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின் அமைப்பின் அதிர்வெண் 48.75 ஹெர்ட்ஸாக வேகமாக குறைந்து, வெறும் 4.1 விநாடிகளில் முழு மின் கட்டமைப்பும் செயலிழந்துள்ளது.

மின் அதிர்வெண் குறைவை தடுக்கும் தானியங்கி பாதுகாப்பு அமைப்பின் (UFLS) 5 நிலைகளும் செயல்பட்டும் பலனில்லை. 1,135 மெகாவாட் மொத்த உற்பத்தியில் 449.2 மெகாவாட் (39.6%) துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவேவ, லக்ஷபான உள்ளிட்ட பல நீர்மின் நிலையங்களும் பாதுகாப்பு காரணமாக தானாகவே செயலிழந்துள்ளது.

மின் தடைக்கு பிறகு 4 பிரதான வழிகளில் மின்சாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொத்மலை, விக்டோரியா, புதிய லக்ஷபான, சமனலவேவ, கெலனிதிஸ்ஸ ஆகிய நிலையங்கள் மூலம் மாலை 4.58 மணிக்குள் அனைத்து பிரதான துணை மின் நிலையங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. முழு அமைப்பையும் மீட்க 5 மணி 15 நிமிடங்கள் ஆனதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், நுரைச்சோலை முதலாவது அலகில் திடீர் மின் இழப்பு ஏற்பட்டதற்கான சரியான மூல காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அது தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.