எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் எடுத்துள்ள அவசர நடவடிக்கை!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிக்கையில், நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மாதாந்திர எரிவாயு தேவை 38,000 மெட்ரிக் டொன்கள். இதில் 85% லிட்ரோ நிறுவனம் வழங்குகிறது - அதாவது 32,000 டொன்கள். லாஃப்ஸ் நிறுவனம் 6,000 டொன்கள் வழங்குகிறது.

தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த மாதம் லிட்ரோ 44,000 மெட்ரிக் டொன்கள் வெளியிட உள்ளது. இது வழக்கத்தை விட 12,000 டொன்கள் அதிகம்.

முதல் 15 நாட்களில் 25,000 டொன்கள் வெளியிடப்படுகிறது. அதில் கடந்த 3 நாட்களில் மட்டும் 11,700 டொன்கள் சந்தைக்கு வந்துள்ளது. மேலும் 19,000 டொன்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

லாஃப்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் வழங்காததால் நுகர்வோர் விவகார ஆணையம் அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.

எனவே மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும், பல இடங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நிலைமை சீராகும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.