ரூ.634 கோடி முறைகேடு புகாரில் என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? - நடிகை ஷபானா கேள்வி

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த முறைகேடு புகாருடன் தொடர்புபடுத்தி சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜகானின் பெயரும், புகைப்படங்களும் கடந்த இரண்டு நாட்களாக யூடியூப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள நடிகை ஷபானா, தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயர் எந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்கான ஆதாரம் என்ன, முதலில் தனது பெயரை இணைத்தது யார், எந்த அடிப்படையில் இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், தன்னை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வெளியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தவறான தகவல்களை வேகமாக பரப்புபவர்கள் அவை பொய்யானவை என்று தெரியவந்தால் அதே வேகத்தில் திருத்தம் செய்வார்களா என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.