குஜராத்தில் சோகம்: கடன் சுமையால் தாய், மகன், மகள் உயிரிழப்பு - இந்தியாவை உலுக்கிய சம்பவம்

குஜராத் மாநிலம் வதோதராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வதோதராவை சேர்ந்த ஆர்த்திபென் சோனி (47), அவரது மகன் நீல்காந்த் சோனி (24), மகள் ஜென்னி சோனி (22) ஆகிய மூவரும் நேற்று தங்களது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து 3 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் பணம் தொடர்பான குறிப்புகள் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், குடும்பத்திற்கு சுமார் 33 லட்சம் ரூபாய் கடன் சுமை இருந்ததாகவும், இரண்டு கார்களுக்கான தவணை பாக்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடனை அடைக்க வீட்டை விற்கவும் அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்த குடும்பம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளது. ஆர்த்திபென்னின் கணவர் ஓராண்டுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவர் தனது பிள்ளைகளுடன் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.

கணவர், தாய், தந்தை, சகோதரன் என அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.