'ஹரக் கட்டா'வை அதியுயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்ற உத்தரவு; பயங்கரவாதத் தடைச் சட்ட குற்றச்சாட்டுகள் நீக்கம்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் பலத்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 'ஹரக் கட்டா' உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என அண்மையில் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இந்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மேலும், பிரதிவாதிகள் தாக்கல் செய்த பிணை விண்ணப்பங்கள் தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
