ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வு - தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!


கடந்த 24 மணிநேரத்தில் பெய்த பலத்த மழையால் மகாவலி, களனி மற்றும் களு ஆகிய பிரதான ஆறுகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், ஆறுகளை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்ததாவது, நவலப்பிட்டி, நானுஓயா மற்றும் வட்டவளை உள்ளிட்ட மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, நவலப்பிட்டி முதல் பேராதனை வரையிலான மகாவலி ஆற்றங்கரையோர தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தற்போது நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதுடன், 'தித்வா' சூறாவளி காலத்தில் ஏற்பட்ட அளவிலான பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம் தற்போது இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லக்ஷபான, நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளது. கித்துள்கலை பகுதியில் நீர்மட்டம் சற்று குறையத் தொடங்கியிருந்தாலும், ஹங்வெல்ல – அவிசாவளை மற்றும் அவிசாவளை – கித்துள்கலை – நோர்வூட் இடையிலான தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் தொடர்கிறது.

மேலும், இரத்தினபுரி மேல் பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ள நிலையில், நீர்மட்டம் எச்சரிக்கை அளவை நெருங்கியுள்ளது. இருப்பினும் திடீர் உயர்வு எதுவும் பதிவாகவில்லை. எனினும், தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரவலயத்தில் நில்வளா மற்றும் ஜின் ஆற்றுப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளதுடன், உடனடி வெள்ள அபாயம் எதிர்பார்க்கப்படவில்லை. அதேபோல், மஹா மற்றும் அத்தனகலு ஆற்றுப் பகுதிகளில் குறைந்தளவு மழை மட்டுமே பதிவாகியுள்ளதால், தற்போது வெள்ள அச்சுறுத்தல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.