தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!


2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து விதமான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். மேலும், இக்காலப்பகுதியில் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், விளம்பரப்படுத்துதல் ஆகியனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பரீட்சையில் இடம்பெறவுள்ள அல்லது அதற்கு ஒத்த வினாக்கள் வழங்கப்படும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்வது, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் அவ்வாறான விளம்பரங்களை வெளியிடுவது அல்லது அத்தகைய ஆவணங்களை கைவசம் வைத்திருப்பதும் சட்டவிரோதமானது என பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி நாடு முழுவதும் அமைந்துள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.