கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு – 11 கைதிகள் காயம்!


கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் தற்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.